×

யானை அருகே சென்று செல்பி எடுத்த தெலங்கானா தொழில் அதிபர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் : வனத்துறையினர் நடவடிக்கை

சத்தியமங்கலம் : ஆசனூரில் காட்டு யானை அருகே சென்று செல்பி எடுத்த தெலங்கானாவை சேர்ந்த தொழில் அதிபர் இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோர வனப்பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் நடமாடுகின்றன. சாலையில் செல்லும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் காட்டு யானைகளின் அருகே சென்று தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைத்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை நடமாடி கொண்டிருந்தது. அப்போது, ஆசனூர் வனச்சரக அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

காட்டு யானையின் அருகே 2 பேரை காரை நிறுத்திவிட்டு தங்களது செல்போன்களில் செல்பி எடுக்க முயன்றதை கண்ட வனத்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் திலீப் (37), பிரசாத் (46) என்பதும், இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கரூர் செல்வதற்காக வனப்பகுதி வழியாக காரில் வந்த போது காட்டு யானையை கண்டு காரை நிறுத்தி விட்டு யானை அருகே சென்று செல்பி எடுக்க முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா முன்பு ஆஜர்படுத்தினர். இருவருக்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்குமாறு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது.

The post யானை அருகே சென்று செல்பி எடுத்த தெலங்கானா தொழில் அதிபர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் : வனத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Sathyamangalam ,Asanur ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை